உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சி சுகாதார அமைப்பிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் எதிர்வரும் காலங்களில் சுகாதார சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க கூடிய ஒரு முன்னோடி திட்டம் அவசியம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மருத்துவ நிர்வாகிகள் நிறுவனத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான பதவியேற்பு விழா அண்மையில் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஒரு வலுவான சுகாதார அமைப்பு ஒரு வளமான தேசத்தின் அடித்தளம் என்பதை தற்போதைய அரசாங்கம் அங்கீகரிக்கிறது. மருத்துவ நிர்வாகிகள் மற்றும் சுகாதார அமைச்சகம் இப்போது இந்த நாட்டின் எதிர்கால வளர்ச்சி, திட்டம் மற்றும் தொலைநோக்கு பார்வை குறித்து தெளிவான புரிதலைக் கொண்டுள்ளன. மறுமலர்ச்சியின் புதிய சகாப்தத்தை நோக்கி நாம் நகரும் போது, அதை செயல்படுத்த அனைவரும் உறுதிபூண்டுள்ளனர்.
இவ் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் சுகாதார சேவைக்காக வரலாற்றில் மிகப் பெரிய தொகை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் இந்நாட்டு மக்களுக்கு முறையான மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்தப் பணியில் மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவம், தலைமைத்துவம் மற்றும் மூலோபாய மேற்பார்வை என்பன அவசியமானவையாகும்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டுதலின் ஒரு முக்கிய அங்கமாக ஆரம்ப சுகாதார சேவை வலுப்படுத்தப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார சேவையின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார நிறுவனங்களின் மூலம் நோயாளர் நெரிசலைக் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதே சுகாதார அமைச்சின் முதன்மையான நோக்கமாகும்.
தற்போது பொதுமக்களிடையே தொற்றா நோய்களின் பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதுடன், இது பெரும் சுகாதார சவாலாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுடனும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதியவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதும் புதிய அரசாங்கத்தின் குறிக்கோளாகும்.
“சுத்தமான இலங்கை” திட்டத்தின் கீழ், நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுகாதார அமைப்பை உருவாக்க முடியும். இந்த செயல்பாட்டில் மருத்துவ நிர்வாகிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சி சுகாதார அமைப்பிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
சாதாரண நிர்வாக முறைகளை உயர் தொழில்நுட்ப மேலாண்மை நிலைக்குக் உயர்த்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஆகையால் எதிர்வரும் நாட்களில் சுகாதார சேவைகளின் செயல்திறனை மேம்படுத்த AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க கூடிய ஒரு முன்னோடி திட்டம் அவசியம் என்றார்.