அரசியல் நோக்கங்களுக்காக அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக புதிதாக அவற்றில் ஏதேனும் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மீள விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனில் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமது ஆட்சியிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரவித்தார்.
ஐ.தே.க.வின் கோட்டை தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மிக மந்தகதியிலுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது மாத்திரம் போதுமானதல்ல. அவற்றுடன் பொருளாதாரமும் முன்னேற்றமடைய வேண்டும்.
நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றால் மாத்திரமே பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது எனக் கொள்ளலாம். அந்நிய செலாவணியை ஈடுட்டுவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி என்பவை அத்தியாவசியமானவையாகும். இவற்றோடு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் முக்கியத்துவமுடையதாகும்.
உள்நாட்டு உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு வருமானம் அதிகரித்தால் மாத்திரமே மக்களின் கைகளிலும் அரசாங்கத்திடமும் தட்டுப்பாடற்ற பணப்புலக்கம் காணப்படும். ஆனால் இன்று நாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனரே தவிர, புதிய முதலீட்டாளர்கள் எவரும் வருவதாகத் தெரியவில்லை. இதனால் மக்கள் மீதான சுமைகளும், பொருளாதார அழுத்தங்களுமே அதிகரிக்கும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் எமது ஆட்சியிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக புதிதாக அவற்றில் ஏதேனும் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காக மீள விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனில் அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றார்.