மாலபே சைட்டத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!!

263 0

மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(5) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘பொய் தீர்வு வேண்டாம், மாலபே சைட்டம் பொய் திருட்டு பட்டத்தை உடனே இரத்துச் செய், சுதந்திரமான மருத்துவ நலனில் தலையிட வேண்டாம், சுதந்திரமான மருத்துவக் கல்வியை விற்கும் ராஜித, எஸ்.வி கிரியெல்லகெ செயற்பாடுகளை எதிர்ப்போம்.’ போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த தனியார் மாலபே சைட்டம் பல்கலைக்கழகம் மூலம் போலியான வைத்தியர்கள் உருவாகின்றார்கள், பணத்தை கொடுத்து வைத்தியர் ஆகின்றமையினால் தோட்டத் தொழிலாளியாகிய எம்மைப் போன்ற குடும்பங்களில் இருந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் எதிர்கால நிலைமை படுபாதாளத்தில் தள்ளப்படும்.

ஒவ்வொரு மாணவனும் தனது பட்டப்படிப்பின் பின்னர் ஒரு வைத்தியராக பல கனவுடன் வருகின்றான். ஆனால் பணத்தை கொடுத்து போலியான வைத்தியர்களை சைட்டம் உருவாக்குகின்றது.

நாட்டின் தலைமைகள் குறித்த விடயத்தை கவனத்தில் எடுத்து எதிர்கால சந்ததிகளை ஒரு போலியான வைத்தியர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக பிரதான வாயில் கதவு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்கும் பெரும்பான்மை சிங்கள மாணவர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவெளை, நேற்றைய தினமும்(4) பெரும்பான்மை சிங்கள மாணவர்களினால் சீ.சீ.ரீ.வி கமெராவை பல்கலைக்கழகக் கண்காணிப்பிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும், பட்டப்படிப்பை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும், முறையற்ற வகுப்புத் தடையை உடனடியாக நீக்க வேண்டும்,

மேலும், மகாபொல கொடுப்பனவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், மாணவர் ஒன்றியத்தை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.