பஞ்செட்டியில் ரூ.256 கோடியில் புதிய துணை மின்நிலையம்

25 0

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் ரூ. 256.45 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 230/110கி. வோ. துணை மின்நிலைய கட்டுமான பணிகள் விரைந்து முடிக்குமாறு, மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில் ரூ. 256.45 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக 230/110கி. வோ. துணை மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த துணை மின்நிலைய பணிகள் கடந்த ஜூலை 2023 ல் தொடங்கப்பட்டு, தற்போது கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட சிவில் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. துணை மின்நிலைய கட்டுமான பணிகள் சுமார் 75 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 2025 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துணை மின் நிலையத்தின் மூலம், 110 கிலோ வோல்ட் கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய்கண்டிகை, சோத்துபெரும்பேடு, பஞ்செட்டி, பொன்னேரி, மேலூர், அலமாதி மற்றும் பெரியபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு மின்விநியோகம் செய்யப்படும்.

இந்த ஆய்வின் போது பொன்னேரி கோட்ட செயற்பொறியாளர் ஆர். பாண்டியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.