கொழும்பில் கைதான இளைஞர் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கம்

19 0

கொழும்பில் அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களும், பகிரப்படும் செய்திகளும் போலியானவை. குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் அவர் கடும்போக்குவாதி என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (30) அறிக்கையொன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 22ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பணிபுரியும் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சில தரப்பினரால் போலி செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெளியாகும் எந்தவொரு செய்திகளும் உண்மையானவை அல்ல. இவ்வாறான செய்திகள் பரவுவதைத் தடுப்பது பொலிஸ் தலைமையகத்தின் பொறுப்பாகும்.

ஸ்டிக்கரொன்று ஒட்டப்பட்டமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தது. அந்த விசாரணைகளில் குறித்த இளைஞன் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய அவர் குறித்த ஸ்டிக்கரை ஒட்டியதற்கு அப்பால் கடும்போக்குவாதி என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற முக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஏதேனுமொரு வகையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் முயற்சிப்பவராகக் கூட இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த சந்தேகநபரின் செயற்பாடுகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் போது வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியதாலும் சில இணையதளங்களைப் பின்பற்றியதாலும் ஏதேனுமொரு விடயம் தொடர்பிலான மன உந்துதலுக்கு உள்ளாகியிருக்கின்றார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த மனநிலையின் அடிப்படையிலேயே மத அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அவரால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.

சந்தேகநபரின் கணினி வன்பொருள், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு மக்களிடையே தேசிய மற்றும் மத விழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், மேற்படி கைது தொடர்பில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ள வேளையில், தவறான கருத்துக்களை பரப்புவதன் மூலம் நாட்டின் அமைதி மற்றும் தேசிய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படலாம் என வலியுறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு, விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.