ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை வெளிப்படுத்துவோம்!

24 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை – தெய்யந்தர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாரம்பரியமான அரசியல் கலாச்சாரத்தை நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஊடாக மாற்றியமைத்தார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பொதுத்தேர்தலை போன்று வெற்றிப்பெறுவோம்.ஊழலற்ற சிறந்த உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளை தோற்றுவிக்க வேண்டுமாயின் கிராமத்தின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்ற வேண்டும்.

பதவிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். ஜனாதிபதி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சாதாணவர்களே அவர்களும் பொதுமக்களை போன்று செயற்பட வேண்டும் என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தியுள்ளோம்.அரச நிர்வாக கட்டமைப்பை வினைத்திறனாக்கியுள்ளேன். சுயாதீன ஆணைக்குழுக்கள் எவ்விதமான அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் ஏதுமின்றிய வகையில் செயற்படுகின்றன.

மக்கள் வரிப்பணத்தை வீண்விரயமாக்காத மற்றும் மோசடி செய்யாத அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளேன். மக்கள் வரிப்பணத்தை மோசடி செய்தவர்களை அறிந்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆகவே ஊழல்வாதிகளின் பெயர் விபரங்கள் தொடர்ச்சியாக வெளிவரும். குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது. பொலிஸ் தரப்பு முறையான விசாரணைகளை மேற்கொள்ளும், சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும், நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்கும். எமது பணிகளை நாங்கள் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரை வெளிப்படுத்துவோம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மூவர் சிறையில் உள்ளார்கள்.பொலிஸ்மா அதிபர் சிறையில் உள்ளார். பிரசன்ன ரணவீர தலைமறைவாகியுள்ளார். எத்தனை நாட்களுக்கு தலைமறைவாக இருக்க முடியும். கடந்த காலங்களில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் தான் தற்போது அச்சமடைந்து ஊடகங்களில் அழுது புலம்புகிறார்கள். இதனை இரவு நேர செய்திகளில் பார்க்கலாம்.

வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே நாங்கள் பொறுப்பேற்றோம். சிறந்த திட்டமிடல்களினால் குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தியுள்ளோம். ஆகவே நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வேண்டுமா, அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்றார்.