வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது!-மைத்திரிபால சிறிசேன

244 0

சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியை முன்னிறுத்தி எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் கொள்கை ரீதியிலான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள போதிலும், அரசியல் தேவைகளுக்கு அமைவாக செயற்படும் சில குழுவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தான் மிகுந்த வருத்தமடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று காலை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் கைபொம்மைகளாக அல்லாமல் தங்களதும் நாட்டினதும் எதிர்காலத்திற்காக தமது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்ளுமாறு அனைத்து வைத்திய துறை மாணவர்களிடமும் ஜனாதிபதி இதன்போது கேட்டுக் கொண்டார்.

நாட்டின் கல்வியில் எந்தவொரு பிள்ளைக்கும் அநீதி இழைக்கப்படுவதற்கு தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக இடம்பெறுகின்ற இந்த வேலை நிறுத்தத்தின் ஊடாக பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே அன்றி சிறப்பு சலுகைகளையுடைய செல்வந்த வர்க்கத்தினரல்ல என்று கூறிய ஜனாதிபதி, பிரச்சினைகள் இருப்பின் எந்தவொரு தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தும் சந்தர்ப்பம் இருப்பதாக கூறினார்.