சென்னை நந்தனம் எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதி கட்டிடம், அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்க, சென்னை நந்தனம் எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 500 மாணவர்கள் தங்கி பயில, 10 தளங்களுடன், 121 அறைகள், நவீன வசதியுடன் நூலகம், பயிலகம், கற்றல் கற்பித்தல் அறை, உடற்பயிற்சி கூடம், உள்அரங்கு விளையாட்டு கூடம் ஆகியவற்றுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ.44.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தை போற்றும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி சமத்துவ நாளன்று இந்த விடுதி திறக்கப்பட உள்ளது. இன்றைய கூட்டத்துக்கு வந்துள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தோழமை கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் திறப்பு விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
அமைச்சர் ஆய்வு: எம்.சி. ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய விடுதி கட்டிட கட்டுமான பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். குறித்த காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.