தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிய நிர்மாணம் ஆராய்ந்து அறிக்கை தருமாறு புத்தசாசன, பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு பணிப்பு

36 0

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரேதா விகாரை வளாகத்தில் புதிதாக நிர்ணமாகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டடம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தருமாறு புத்தசாசன திணைக்கள மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

அத்துடன், தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தினைப் பயன்படுத்தி இனவாதத்தினை தோற்றுவிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும், முழுமையான ஆய்வின் பின்னர் தனியார் காணிகள் காணி உரிமையாளர்களிடத்திலேயே மீளளிக்கும் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறினார்.

தையிட்டியில் திஸ்ஸ விகாரைப் பகுதியில் புதிய நிர்மாணம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளையும் கையகப்படுத்தப்படும் செயற்பாடுகள் தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் என்னிடத்தில் முறைப்பாடு அளித்தனர். அதனையடுத்து நான் அவர்களை அழைத்து கலந்துரையாடி முழுமையான விடயங்களைப் பெற்றுக்கொண்டேன்.

அதேபோன்று திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்ட நிலமானது முறையாகப் பெறப்பட்டதாக விகாரதிபதி கூறியிருக்கின்றார். அவரிடத்திலும் அதற்கான சான்றாதார ஆவணங்களை கோரியுள்ளேன்.

எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விடயதானத்தின் பிரகாரம், விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டதாக உள்ளிட்ட விடயங்களை மட்டுமே கையாள முடியும். அவை அமைக்கப்படுகின்ற காணிகளில் பிரச்சினைகள் அல்லது சர்சைகள் காணப்பட்டால் அதுதொடர்பில் காணி அமைச்சே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அந்தவகையில், குறித்த தகவல்களைப் பெற்று காணி அமைச்சின் ஊடாக முழுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்விதமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தன.

அதுபற்றிய காணொளிகள், புகைப்படங்களையும் நான் பார்த்தேன். அதனையடுத்து எமது அமைச்சின் செயலாளர், புத்தசாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடத்தில் அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு கோரியுள்ளேன்.

மேலும், இந்த நிர்மாணத்துடன் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. ஆகவே பாதுகாப்பு அமைச்சிடத்திலும் திஸ்ஸ விகாரையுடன் இணைந்து செயற்படுகின்ற படைப்பிரிவுகள் அதன் வகிபாகம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களைச் சந்தித்தபோது நான் ஒருவிடயத்தினைக் கூறியிருந்தேன். காணியின் உரிமை பொதுமக்களுக்கானது என்றால் அது அவர்களிடத்திலேயே ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடாகும். அரசாங்கத்தின் நிலைப்பாடும் அது தான்.  அந்த வகையில் உரிய ஆய்வுகளைச் செய்து இறுதி முடிவுகளின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பது உறுதியான விடயமாகும்.

அதேநேரம், திஸ்ஸ விகாரை விடயத்தினை மையப்படுத்தி இனவாத, மதவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு வடக்கிலும் தெற்கிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. அதில் ஜனாதிபதி அநுரகுமாரவும் உறுதியாகவே இருக்கின்றார் என்றார்.