175 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும்- : அஜித் பி பெரேரா

19 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி 175 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதோடு, ஏனைய கட்சிகளுடனும் இணைந்து சபைகளை நிறுவும். கட்சி தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். அது மாத்திரமின்றி தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஏனைய கட்சிகளுடன் இணைந்தும் சபைகளை நிறுவுவோம். இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் சுமார் 175 உள்ளுராட்சிமன்றங்களில் நாம் வெற்றி பெறுவோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. எமது அரசின் இராஜதந்திர அணுகுமுறைகள் பலவீனமடைந்துள்ளன.

வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளும் பலவீனமடைந்துள்ளன. இந்த நிலைமையின் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தலைதூக்கியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அல்ஜசீரா செய்தி சேவை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிட்டு செயற்பட்டிருந்தது. இதன் பின்னணியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களே காணப்படுகின்றனர். மீண்டும் புதிதாக அதனை தோற்றுவிக்கச் செய்வதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றம் இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து அதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் குழுக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றன.

சிலர் தமிழீழ அரசைத் தோற்றுவிப்பதற்கும், மேலும் சிலர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விற்று பிழைப்பு நடத்துவதற்கும் முயற்சிக்கின்றனர்.

அவ்வாறானவர்கள் பலம் மிக்க குழுக்களாகவும் உள்ளனர். உலகில் பல முக்கிய பதவிகளை வகிப்பவர்களாகவும் அவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், கனடா போன்ற நாடுகளிலுமே இவ்வாறு அவர்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளில் கவனயீனமான போக்கு மற்றும் அது குறித்த அனுபவமின்மையே பாதுகாப்பு படையினர் மீது தடை விதிக்கப்படுவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது. சமூகத்திலும் அவ்வாறான நிலைப்பாடு இல்லை. கட்சிக்குள் அவ்வாறான மாற்று தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது. நாமும் அதற்கு முயற்சித்தோம். எனினும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என்றார்.