முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்கும் எண்ணத்தில் இந்தியா

29 0

முல்லைத்தீவில்(Mullaitivu) பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் தாம் இந்தியத்துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியுடன் பேசியுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார்

இந்திய துணைத்தூதுவருக்கு முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைக்கும் எண்ணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், பண்பாட்டு நடுவம் அமைப்பது தொடர்பில் பேசப்பட்ட போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைப்பதுதொடர்பாக இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசியுள்ளேன்.

இந்தியத்துணைத்தூதுவருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கும் எண்ணமுள்ளது. அரசாங்கம் உரியவகையில் அணுகினால் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைப்பதற்கு இந்தியா நிதிஉதவிகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கூட்டத்தில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றோம். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் என்னோடு பேசியிருந்தார்.

குறித்த பண்பாட்டு நடுவத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிறுவுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை எடுத்து, கலாச்சார அமைச்சின் ஊடாக இதற்குரிய நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம்

இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்பாட்டு நடுவம் அமைக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை உரிய தரப்பினர்களுக்கு அனுப்பிவைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம், இந்தியாவை உரியமுறையில் அணுகுவதன்மூலம் முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவியை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியுமென கூட்டுறவுப் பிரதி அமைச்சரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆலோசனை ஒன்றையும் வழங்கியுள்ளார்.