யாழில் அமைச்சர் குமார ஜயகொடி கலந்துகொண்ட நிகழ்வில் நடந்த எதிர்பாராத சம்பவம்

16 0

யாழ்ப்பாணத்தில் வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கலந்து கொண்ட கூட்டத்தில் சிறிது நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின் வெட்டு ஏற்பட்டது.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று(29.03.2025) மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோதே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உரையாற்றிக் கொண்டு இருந்தபோதே மின்தடை ஏற்பட்டது. இதனால் சிறுது நேரம் நிகழ்வில் தடங்கல் ஏற்பட்டது.

அதன் பின்னர், மின்சாரம் வழமைக்கு திரும்பியது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று மாலை மின் தடை சிறிது நேரம் ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாண அலுவலகம் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பில் தகவலை சமூக ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்களை சாடிய இளங்குமரன்

இதனையடுத்து, ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் “நான் அப்ப கோப்பை அல்ல, அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும்” என கூறி சென்றார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிபடுத்தியிருந்தனர். இந்நிலையில், மீண்டும் திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன், மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தெரியாமல் பேசிவிட்டேன் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் “நாம் செய்தியினை வெறுமனே உறதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை, நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.