நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை

16 0

நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை சூறையாடினர்.

மற்றொரு சம்பவத்தில், காத்மாண்டு தலைநகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் மற்றும் ஒரு போராட்டக்காரர் என இருவர் இதில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.

காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தலைநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 4.25 மணிக்கு அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினர். இது சனிக்கிழமை காலை 7 மணி முதல் நீக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது வீடுகளை எரித்தல் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியதில் ஈடுபட்ட 105 போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தவால் ஷம்ஷேர் ராணா மற்றும் கட்சியின் மைய உறுப்பினர் ரவீந்திர மிஸ்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிருத்வி சுப்பா குருங், “இது ஒரு அப்பட்டமான நாசவேலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் அராஜகம். இது ஒரு போராட்டமாக இருக்க முடியாது.” என்று கூறினார்.

நேபாளத்தில் முடியாட்சி: நேபாளத்தில் 239 ஆண்டு கால மன்னராட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாட்டின் கடைசி மன்னரான 77 வயதான ஞானேந்திரா, காத்மாண்டுவில் உள்ள ஒரு தனியார் வீட்டில் தனது குடும்பத்துடன் ஒரு சாதாரண குடிமகனாக வசித்து வருகிறார்.

முடியாட்சி ஒழிக்கப்பட்டதிலிருந்து 16 ஆண்டுகளில், நேபாளம் 14 அரசாங்கங்களை உருவாக்கியது. அரசியல் ஸ்திரமின்மை பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில், முக்கியமாக எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, தென் கொரியா மற்றும் மலேசியாவில் வேலை தேடத் தொடங்கினர்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை அடுத்தடுத்த அரசாங்கங்கள் நிறைவேற்றத் தவறியதால் பொதுமக்களின் விரக்தி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 55 வயது அரசு எதிர்ப்பாளர் மினா சுபேதி, “சமீப ஆண்டுகளாக மோசமான அரசியல் நிகழ்வுகள் நேபாளத்தில் நடந்து வருகின்றன. நாடு கணிசமாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். மக்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள், அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி கிடைத்திருக்க வேண்டும். நாம் ஊழல் இல்லாதவர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை.” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குடியரசு அமைப்பைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கானோர் எதிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேபாளத்தில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியை வழிநடத்திய முன்னாள் கெரில்லா தலைவரான புஷ்ப கமல் தஹால் பிரசண்டா, “நேபாளிகள் கடந்த காலத்திற்குத் திரும்ப மாட்டார்கள். குடியரசு ஆதரவாளர்கள் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட முடியாததால் அவர்கள் தலையை உயர்த்தத் துணிந்திருக்கலாம்.

இந்தச் செயல்கள் அனைத்திற்கும் பின்னால் ஞானேந்திர ஷா (நேபாளத்தின் கடைசி மன்னர்) இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த விசாரணை நடத்தப்பட வேண்டும். ஞானேந்திர ஷாவை விட்டுவிட முடியாது. அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

நேபாளத்தின் பிளவுபட்ட அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதில் இருந்து பெரும்பாலும் விலகி இருந்த ஞானேந்திர ஷா, சமீப காலமாக தனது ஆதரவாளர்களுடன் பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.