“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

15 0

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை அமைச்சரிடம் பெண் ஒருவர் திடீரென எழுந்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அமைச்சர் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்றார்.

விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 29) கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதேவேளையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடையும் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மீனா என்ற பெண் எழுந்து அமைச்சரிடம் நேரடியாக “கிராம சபைக் கூட்டம் நடக்கும் இடத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். மேலும், “மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள்? மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளதே, பொதுமக்களாகிய எனது கேள்விக்கு அமைச்சராகிய நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதற்கான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்தபின் சம்பளம் வழங்குவார்கள்.அதற்குள் மத்திய அரசை குறைகூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா?” என தொடர்ந்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் முன் பெண் ஒருவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.