‘தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது’ – தமிழன் பிரசன்னா கருத்து

15 0

 “தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவை அதிமுக ஆதரிக்கிறது” என காவேரிப்பட்டணத்தில் நடந்த திமுக இளைஞரணி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி இழைத்து வரும் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக செய்தி தொடர்பு பிரிவு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா பேசியதாவது: இந்தியாவில் மொத்தம் 543 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு தொகுதிகள் மறுவரையறை செய்ய திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் வெற்றி பெற முடிவதில்லை. பாஜகவால் நம்முடைய வாக்குகளை பெற முடிவதில்லை.

இதனால் தென்னிந்தியாவில் 34 தொகுதிகளை குறைத்து விட்டு, வட இந்தியாவில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிஹா ஆகிய மாநிலங்களுக்கு 34 தொகுதிகளை கூடுதலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மக்களவையில் 848 இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தால் தமிழகத்துக்கு கூடுதலாக 10 தொகுதிகள் கிடைக்கும், தமிழகத்துக்கு 10 தொகுதிகள் அதிகரித்தால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு 63 தொகுதிகள், பிஹாருக்கு 39 ராஜஸ்தான் 25 மத்திய பிரதேசத்துக்கு 23 என 120 சீட்டுகள் கூடுதலாக பாஜக அதிகப்படுத்துகிறது.

இதன் நோக்கம் தமிழக மக்கள் கல்வியறிவு பெறக்கூடாது. முன்னேறக்கூடாது என மத்திய அரசு சட்டமாக்கி தமிழர்களை அடிமையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். திமுக-வினர் மீது மத்திய அரசு அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மூலம் பல்வேறு சோதனைகள் மூலம் வழக்குகள் பதிவு செய்து வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் யார் காலிலும் விழவில்லை, இன்றைக்கு அதிமுகவினர் பாஜக காலில் விழுந்து உள்ளனர். மத்திய பாஜக அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கிறது.

தமிழக பிள்ளைகள் படிப்பை கெடுக்கிறது, தமிழ் சமூகம் உயரக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறது. அதிமுக-வினர் கூட்டணி என்றால் நேராக செல்வார்கள். கூட்டணி இல்லை என்றால் தலை மீது துண்டை போட்டுக் கொண்டு கொள்ளை புறமாக செல்வார்கள். அதுதான் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி. பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது அவர்களை அதிமுக ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்கிற உறுதிமொழியை திமுகவினர் ஏற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், முன்னாள் எம்பி சுகவனம், நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கேவிஎஸ் சீனிவாசன், துணை பேச்சாளர் ஆனந்த சைனி, துணை அமைப்பாளர்கள் சங்கர், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி துணை அமைப்பாளர் விசிஎன் மகேந்திரன் நன்றி கூறினார்.