உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்பினர் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டு அவர்கள் மீது தடை விதிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இந்த விவகாரம் இராஜதந்திர மட்டத்தில் மிகவும் தீர்க்கமாக அணுகப்பட வேண்டியதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தம் நிறைவடைந்து நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், ஒரு தரப்பினர் மாத்திரம் இலக்கு வைக்கப்பட்டு அவர்கள் மீது தடை விதிக்கப்படுவது பொறுத்தமானதல்ல. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையானது தேசிய ரீதியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
தேசிய ரீதியில் இடம்பெற்ற பிரச்சினைகளில் சர்வதேசத்தின் தலையீடுகள் அனுமதிக்கப்படக் கூடாது. இப்போது ஓரிருவருக்கு விதிக்கப்படும் தடைகள் பின்வரும் காலங்களில் நாட்டுக்கானதாகக் கூட மாற்றமடையக் கூடும். எனவே இந்த விவகாரம் இராஜதந்திர மட்டத்தில் மிகவும் தீர்க்கமாக அணுகப்பட வேண்டியதாகும். எந்தவகையில் தேசிய ரீதியிலான பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தக்கப்படக் கூடாது.
இதற்கு முன்னரும் அமெரிக்கா போன்ற நாடுகளால் இவ்வாறு படை வீரர்களுக்கெதிராக தடை விதிக்கப்பட்ட போதும், அனைத்து இன மக்களும் இணைந்து இலங்கையர்கள் என்ற ரீதியில் அதற்கு பதிலளித்தனர். அப்போதைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் தேசிய ரீதியில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தான் வலியுறுத்தியிருந்தார்.
மனித உரிமைகள் பேரவையிலும் இது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. எமது ஆட்சி காலத்தில் இகு குறித்த வேலைத்திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தோம். அந்த வகையில் நிலையான கொள்கை திட்டங்களின் கீழ் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காணப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.