முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே மீனவர்களின் நலன்கருதி முல்லைத்தீவு கடற்கரையில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது.
குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்பு முல்லைத்தீவு – மணற்குடியிருப்புப் பகுதியில் வெளிச்சவீடொன்று இருந்தது. அது தற்போது முற்று முழுதாக அழிவடைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொக்கிளாயிலிருந்து பேப்பாரப்பிட்டிவரை சுமார் 74 கிலோமீற்றர் வரையிலான கடற்கரையோரத்தில் அதிகளவான மீன்பிடித் துறைகளிலிருந்து, மீனவர்கள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேரந்த மீனவர்கள், முன்பு வெளிச்சவீட்டின் உதவியுடன் இடர்பாடுகளின்றி கடலுக்குச்சென்று தமது துறைகளில் கரையேறுவார்கள்.
தற்போது வெளிச்சவீடு முற்றாக அழிவடைந்துள்ளதால் மீனவர்கள், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரையேறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில், கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். அவரும் வெளிச்சவீட்டினை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
எனவே இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், ஏற்கனவே முன்பிருந்த இடத்தில் வெளிச்சவீட்டை அமைப்பதென ஒரு தீர்மானத்தை எடுப்பதுடன், அந்தத்தீர்மானத்தை கடற்றொழில் மைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் நடவடிக்கைக்காக் அனுப்பிவைப்பதென்ற ஒரு தீர்மானத்தையும் எடுப்போம் என்றார்.
இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அனுப்பிவைப்பதென்ற முடிவும் எடுக்கப்பட்டது.