பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான யோசனை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எட்டு அல்லது ஒன்பதாம் திகதியளவில் பாராளுமன்றத்தில் குறித்த யோசனையை சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவொன்றை அமைத்தல் மற்றும் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் யோசனை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
2002ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அலுவலர்களை பதவி நீக்கம் செய்யும் (நடைமுறை ) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையாக சபாநாயகரால் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்படும். குறித்த குழுவின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து பதவி நீக்கல் தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்க வேண்டும்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பான யோசனையை ஆளும் தரப்பு 115 உறுப்பினர்களின் கைச்சாத்துடன் சபாநாயகரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை (25) முன்வைத்துள்ளது.
முறைகேடான செயற்பாடுகள்,பதவியின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்தமை, கடமையினை முறையாக செயற்படுத்தாமை மற்றும் பதவியில் இருந்துக் கொண்டு ஒருதலைப்பட்சமாக செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆளுங் கட்சியான தேசிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கும் யோசனையை சபாநாயகரிடம் முன்வைத்துள்ளது.
2002ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அலுவலர்களை பதவி நீக்கம் செய்யும் (நடைமுறை ) சட்டத்தில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பதவி நீக்கம் செய்வது தொடர்பான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தின் பிரகாரம், முறைகேடான செயற்பாடு மற்றும் ஊழல், அதிகாரத்தை மோசமான முறையில் செயற்படுத்தல், பாரதூரமான முறையில் பொறுப்பில் இருந்து விலகல், ஒருதலைப்பட்சமான முறையில் செயற்படல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுக்கள் தேசபந்து தென்னகோன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வெலிகம ஹோட்டல் மீது துப்பாக்கிச்சூட்டு பிரயோகத்தை மேற்கொண்டமை, 2022.05.09 ஆம் திகதியன்று காலி முகத்திடல் போராட்டக்களத்தின் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாத்தறை வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் கட்டளையை ஏற்றுக்கொள்ளாமை, பிடியாணையை கருத்திற் கொள்ளாமல் தலைமறைவாகியிருந்ததை குறித்த குற்றச்சாட்டுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2002ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அலுவலர்களை பதவி நீக்கம் செய்யும்(நடைமுறை ) சட்டத்தின் பிரகாம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் கையொப்பத்துடனான யோசயை ஒன்று முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும்.
விசாரணை குழுவொன்றை அமைத்தல் மற்றும் பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குவது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் யோசனை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டவுடன், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்படும்.
2002ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அலுவலர்களை பதவி நீக்கம் செய்யும்(நடைமுறை ) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பிரதம நீதியரசரால் பெயர் குறிப்பிடப்படும் உயர்நீதிமன்ற நீதியரசர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சட்டம் அல்லது அரச நிர்வாக முகாமைத்துவ துறையில் விசேட தேர்ச்சிப் பெற்றவர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
சட்டம் மற்றும் அரச நிர்வாக, முகாமைத்துவத்தில் தேர்ச்சிப் பெற்ற ஒருவரை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதியுடனேயே சபாநாயகர் குழுவின் உறுப்பினராக சபாநாயகர் நியமிக்க வேண்டும்.பிரதம நீதியரசரினால் பெயர் குறிப்பிடப்படும் உயர்நீதிமன்ற நீதியரசர் இந்த குழுவின் தலைவராக செயற்பட வேண்டும்.
சபாநாயகரால் நியமிக்கப்படும் விசேட குழுவின் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்தால் அந்த பதவியை வகிக்கும் நபரை பதவியில் இருந்து நீக்கும் யோசனையை பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்க சபாநாயகருக்கு அதிகாரமளிக்கப்படும்.
குறித்த யோசனை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு முழுமையான ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.