இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்களிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் பிரிட்டன் கொண்டுவர வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் விதித்துள்ள தடைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுதமோதலின் போது தமிழர்களுக்கு எதிராக அவர்கள் இழைத்த குற்றங்களிற்காக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் சவேந்திர சில்வா, ஜகத்ஜெயசூரிய, வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் தடைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கின்றது.
இந்த தடைகளும் முன்னர் கனடா, அமெரிக்கா ஆகியவை அரசியல் தலைவர்கள், இராணுவ தளபதிகள் ஆகியோருக்கு எதிராக அறிவித்த தடைகளும் இலங்கை அரசாங்கம், தமிழர்களிற்கு எதிராக பாரிய குற்றங்களை இழைத்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இனப்படுகொலை சமவாயத்தில் கைசாத்திட்டுள்ள நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு இந்த தடைகள் உதவக்கூடும்.
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தொடர்ந்தும் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும், இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்களிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.