திருகோணமலை மாநகர சபை முதல்வர், உப்புவெலி பிரதேச சபை தவிசாளர், வெருகல் பிரதேச சபை தவிசாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியியை தொடர்புபடுத்தி முகநூலில் வெளிவரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அக்கட்சியின் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை குச்சவெளி பகுதியின் நாவற்சோலை கிராமத்தில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு (26) மாலை இடம் பெற்றது நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர், தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
“திருகோணமலை மாநகர சபை முதல்வர், உப்புவெலி பிரதேச சபை தவிசாளர், வெருகல் பிரதேச சபை தவிசாளர் தொடர்பில் எந்தவொரு முடிவுகளும் எடுக்கப் படவில்லை.
முகநூலில் வெளிவந்ததாக நீங்கள் கூறுவதும் ஒரு போலியான செய்தியாகத் தான் இருக்க வேண்டும்.
எந்தவொரு சபையினுடைய தலைவரையும் தமிழரசுக் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ தெரிவு செய்ய இயலாது.
தேர்தல் முடிவடைந்த பின்பு அந்த சபையில் தெரிவு செய்யப் பட்ட மொத்த உறுப்பினர்களில் அறைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களது ஆதரவைப் பெருபவரே சபைத் தலைவராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்படுவார் என பள்ளி மாணவர்களே அறிவர்.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது” என்றார்.