கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை

305 0

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான முழுமையான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களின் பிரகாரம் விரைவில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்ப் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் விரைவில் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

அத்துடன் வேறு அரச தொழில்களில் ஈடுபடும் பட்டதாரிகள் விண்ணப்பங்கள் கோரப்படும் போது இவற்றுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கிழக்கு முதலமைச்சர் கேட்டுக் கொண்டதுடன், இதன் மூலம் வேலைவாய்யப்பின்றி தொழிலுக்காக போராடும் பட்டதாரிகளுக்கு அநீதிகள் ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நிதியை விரைவில் பெற்றுக் கொள்வது தொடர்பான விடயங்களை எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்.

அதன் பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரப்படும் திகதி தொடர்பான விபரங்களை எதிர்வரும் வாரம் கல்வியமைச்சர், அமைச்சின் செயலாளர், மாகாண சபையின் தலைமை செயலாளர், கல்விப் பணிப்பாளர் உட்பட்டோரின் பங்குபற்றதலுடன் இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.

வெயிலிலும் மழைக்கும் மத்தியிலும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் பட்டதாரிகளுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதற்கான முயற்சிகளின் போது தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய கல்வியமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் கிழக்கு முதலமைச்சர் தமது நன்றிகளை தெரிவித்தார்