ஒலுவில் பிரதேசத்தில் துரித கதியில் இடம்பெற்று வரும் கடலரிப்பினை உடனடியாகத் தடுக்கக் கோரி அப்பிரதேச பொதுமக்களால் நேற்று (29) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
இக்கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தினை ஒலுவில் அனைத்துப் பள்ளிவாசல்கள் நிருவாகத்தினர், ஒலுவில் அபிவிருத்தி ஆலோசனைக் குழுவினர், பொதுநல அமைப்பினர், விளையாட்டுக்கழத்தினர் போன்றோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் ஒலுவில் அன்ஸாரி ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றின் முன்றலில் இருந்து பெருந்திரளான மக்களுடன் ஆரம்பமான இவ்வார்ப்பாட்டப் பேரணி ஒலுவில் பிரதான வீதி வழிகாயகச் சென்று கடலரிப்பு வெகுவாக இடம்வெறும் வெளிச்ச வீடு சென்றடைந்தது.
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு பதாதைகள் பலவற்றையும் ஏந்திச் சென்றனர். ‘அரசே கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடு கப்பல் வராத துறைமுகம் எமக்கு எதற்கு? ;துறைமுக அபிவிருத்தி என்பது கடலரிப்பா?
கடல் எமது நிலத்தையும் பொருளாதாரத்தினையும் காவு கொள்வதை காணாமல் இருக்கும் அரசியல்வாதிதே விழித்தெழு ;காணி இழந்தவர்களுக்கு நஷ்டஈடு எங்கே ;மீனவர்களின் பாதுகாப்புத்திட்டங்கள் எங்கே? ;ஒலுவில் ஊரை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள் ;அரசே எமது கிராமத்தினை கண் திறந்து பார்மீனவர்களின் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பு எங்கே? ;ஒலுவில் மக்களுக்கு துறைமுகத்தில் தொழில்தருவதற்கான வாக்குறுதிகள் எங்கே? என்பன போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாததைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
ஒலுவில் வெளிச்சவீட்டு சுற்றுவட்டாரத்தில் பேரணியில் கலந்து கொண்டு ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒலுவில் பிரதேச கடலரிப்பினை நிறுத்தக் கோரிய மகஜரினை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், துறைசார்ந்த அதிகாரிகள் போன்றோருக்கு அனுப்பி வைக்கும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா மற்றும் ஒலுவில் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரதேச மக்கள் குறிப்பிடுகையில், ஒலுவில் துறைமுக அபிவிருத்தி எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்து கடலரிப்பு இடம்பெற்று வருகின்றது. தூர நோக்கு மிக்க திட்டமிடலின்றி நடைபெற்ற இத்துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நன்மை கிட்டியதை விட பாரிய இழப்புக்களும் அழிவுகளும் இடம்பெற்தே அதிகம்.
கடலை அண்டிய 300 முதல் 400 மீற்றர் நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கரையோரத்திலிருந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து போய்விட்டன. அதுமட்டுமல்லாமல் சிறிய ரக கடற்றொழில் ஈடுபட்ட மீனவர்களின் வாடிகள், வள்ளங்கள், கடற்றொழில் உபகரணங்கள் போன்றவற்றை கடல் அடித்துச் சென்றுள்ளதுடன், மீனவர்களுக்கான துறையொன்று இல்லாத நிலைமையும் எமக்கு ஏற்பட்டுள்ளன.
இக்கடற் பரப்பினை அண்டிய பிரதேசத்தில் இருந்த ஆற்றுடன் கடல் சங்கமித்தால் பன் உற்பத்தியினை நம்பி ஜீவனோபாயம் நடத்தி வந்த ஏழை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டன. இதுதவிர நந்நீர் மீனவர்களின் தொழில் வாய்ப்பும் அப்படியே பறி போயுள்ளன.
துறைமுக நிர்மாண தடுப்பு அணையானது தீர்க்கதரிசனமற்ற முறையில் நிறுவப்பட்டதால் நாளுக்கு நாள் மீற்றர் கணக்கில் கடலிற்குள் சென்று கொண்டிருக்கும் எமது ஒலுவில் பிரதேசம் குறிப்பிட்ட சில காலத்திற்குள் இலங்கைப் படத்தில் ஒலுவில் என்ற கிராமம் இல்லாமல் போகும் அபாயமும் எம்மை நோக்கி வருகின்றது.
காலத்திற்குக் காலம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இங்கு வந்து பொய் வார்த்தைகளை பொதுமக்களிடம் பரப்பி வருவதைவிட மக்களின் நலனில் இவர்கள் அக்கறை கொண்டு செயற்படவேண்டும் என்றனர்.