மக்களின் மனங்களை கொலை செய்யும் சிறிநேசன்

22 0

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களின் மனங்களைக் கொலை செய்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(25.03.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அடிக்கடி களவு, கொலை, கப்பம், என்று பேசிக் கொண்டிருக்கின்றார். உண்மையில், நீங்கள்தான் மக்களின் மனங்களை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க முடியாமல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் அபிலாசைகளை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை என மட்டக்களப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.

உண்மையில் அதை மிக வன்மையாக கண்டிக்கின்றோம். அது மாத்திரமல்ல, எமது கட்சியின் சட்ட ஆலோசகர்கள் நீதிமன்ற கட்டளையினை கோரி சட்டத்தரணி ஊடாக விண்ணப்பித்திருக்கின்றோம்.

அந்த நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிற்பாடு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் மிக மோசமாக நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து இழிவுப்படுத்தி பொய்யான கருத்தை வெளியிட்டது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.