மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 22-ம் தேதி நடந்தது. இதில், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள், கர்நாடகா துணை முதல்வர் உட்பட மொத்தம் 6 மாநிலங்களில் இருந்து 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு அந்த கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜனசேனா கட்சி தலைவரின் அரசியல் செயலர் பி.ஹரிபிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறைக்கு எதிராக சென்னையில் திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனசேனா கட்சிக்கு அழைப்பு வந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று திமுக சார்பில் பிரதிநிதிகள் நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.
எனினும், வெவ்வேறு கூட்டணிகளாக இருப்பதால், இந்த கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என கண்ணியத்துடன் தெரிவிக்க வேண்டும் என எங்கள் கட்சி தலைவர் பவன் கல்யாண் வழிகாட்டினார். அதன்படியே, இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டோம்.
இக்கூட்டத்தில் ஜனசேனா கலந்து கொண்டதாக வெளியான செய்திகள் வெறும் ஊகங்களே. தொகுதி மறுவரையறையில் அவர்களுக்கு கருத்துகள் இருப்பதுபோலவே, எங்களுக்கு கொள்கை உள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் கொள்கையை அதிகாரப்பூர்வமான மேடையில் வெளிப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.