‘மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்’ – உமாகுமரன்

42 0

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு போரின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை நான் வரவேற்கின்றேன்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

மோதலின் வடுக்களும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமையும்என்றும் நினைவிலிருந்து அழியாது.தமிழ் சமூகத்திற்குள் இது குறித்த வலி எவ்வளவு ஆழமானதாக காணப்படுகின்றது என்பது எனக்கு தெரியும், அவர்களில் பலர் 15 வருடங்களாக நீதிக்கான பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

மனித உரிமை மீறல்களிற்கு எதிரான தடை முக்கியமான முதலாவது நடவடிக்கையாகும்.மிக நீண்டகாலமாக குற்றவாளிகள் தண்டனையின் பிடியிலிருந்து தப்பியுள்ளனர் .

மனித உரிமை மீறல்களிற்கு காரணமானவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை அனுமதிக்கப்போவதில்லை என பல காலமாக தொழி;ல்கட்சி உறுதியளித்து வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தது போன்று மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு பாரப்படு;த்தவேண்டும் என நான் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பேன்.

உயிர்பிழைத்தவர்கள்,விடைகளை இன்னமும் தேடும் குடும்பத்தவர்கள்,இந்த குற்றங்களின் நிழலில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நீதி பொறுப்புக்கூறலிற்கு வேண்டுகோள் விடுப்பதற்கு எனது குரலை பயன்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்