எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும்

315 0

தமிழக அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1969-ம் ஆண்டு அண்ணா மறைவுக்குப்பின் கட்சியின் பொருளாளராக எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அன்றைய தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.

கட்சியை தொடங்கிய குறுகிய காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவரை போட்டியிட வைத்து மகத்தான வெற்றி பெறச்செய்தார். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. 1980-ல் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி எம்.ஜி.ஆர். சாதனை படைத்தார். இப்படி தொடர்ச்சியாக மூன்று முறை முதல்-அமைச்சராகி தன்னுடைய அரசியல் வாழ்வில் தோல்வியை சந்திக்காத தலைவராக திகழ்ந்தார். பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் கொண்டு வந்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிக்கென தனி பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கியதுடன் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கிட காரணமாக இருந்தார்.

தான் வாழ்ந்த வீடு உள்பட, தான் ஈட்டிய செல்வங்கள் அனைத்தையும் காது கேளாதோர் பள்ளி மற்றும் பொதுநோக்கங்களுக்காக எம்.ஜி.ஆர். எழுதிவைத்துவிட்டார். 24.12.1987 அன்று அவர் மறைந்தார். அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது.

எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சிறப்புகளை செய்துள்ளார். இந்தநிலையில், அவரது நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கடந்த 2-ந் தேதி எனது தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும். இவ்விழாக்களில் நானும், அமைச்சர்களும் பங்கேற்க உள்ளோம். அவரது சாதனைகள், மக்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் பேரணிகள் நடத்தப்படும்.

அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகளை மாவட்டந்தோறும் ஏழை-எளிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் எம்.ஜி.ஆரின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.