போக்குவரத்துச் சட்ட மீறலைக் கண்டறிய சிவில் உடையில் பொலிஸார்

279 0

வீதிச் சட்டங்களை மீறி பயணிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை நேற்று(04) முதல் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தனியார் நிறுவனம் மூலம் தரப்படும் 10 வாகனங்களில், சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் நடமாடும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீதி ஒழுங்குகள், சட்டம் என்பவற்றை மீறும் சாரதிகளைக்  நடமாடும் சேவையிலுள்ளவர்கள் கண்டால், கொழும்பு பொலிஸ் நிருவாகப் பிரிவு,  முன்னால் கடமையில் உள்ள போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவார்.

இத்தகையவர்களுக்கு எதிராக போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவுள்ளதாகவும், கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்படும் இந்நடவடிக்கை பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.