வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது: தேர்தலுக்கு முன்னரான தோல்வி!

26 0
தேர்தல் என்பது வெற்றி தோல்வி இரண்டும் கலந்தது. ஆனால், தேர்தலுக்கு முன்னரான வேட்புமனு தாக்கலின்போதே நிராகரிக்கப்பட்ட தோல்வி ஜீரணிக்க முடியாதது. ஏற்கனவே பல தேர்தல்களைச் சந்தித்த தமிழர்களின் கட்சிகள் மே மாதம் நடைபெறவுள்ள உள்;ராட்சித் தேர்தலில் அந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ள வேண்டும். 

நடைபெறுமா நடைபெறாதா என்று மூக்கில் விரலை வைத்துப் பலரும் காத்திருந்த இலங்கையின் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 6ம் திகதி இடம்பெறுமென தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டில் நடைபெறவிருந்து அதற்கான வேட்பாளர் மனுத்தாக்கலும் முடிவடைந்து, அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுகளை அச்சடித்த பின்னர் காணாமற்போன தேர்தல், இப்போது ஒன்றரை வருடங்கள் கழித்து, புதிய வேட்பாளர் பட்டியலோடு வந்துள்ளது.
தேர்தலை நடத்த கஜானாவில் (திறைசேரி) பணம் இல்லையென அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை ஒத்தி வைத்ததுக்கு மாறாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தூக்கி வீசி விட்டு அத்தேர்தலை இரத்துச் செய்திருந்தார்.
நாடு முழுவதுமுள்ள 25 தேர்தல் மாவட்டங்களில் 340 உள்ளூராட்சிச் சபைகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் 8,325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கானது. இதற்கு நாற்பதுக்கும் அதிகமான அரசியல் கட்சிகளும், பல நூறு சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தன. 87,000 வேட்பாளர்கள் இத்தேர்தலில் பங்குபெறவிருந்தனர்.
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி 336 சபைகளுக்கு இத்தேர்தல் நடைபெறவுள்ளது. சுமார் பதினேழு மில்லியன் பேர் இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்கள் சுமார் 8,500. ஏறத்தாழ 80,000 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். 107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் (கூட்டணிகள் உட்பட) மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இத்தேர்தலைச் சந்திக்கின்றன. வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வேட்பு மனுக்கள் ரத்துச் செய்யப்பட்டிருப்பது முக்கியமான விவகாரம்.
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கேற்ப, வேட்புமனுக்களை நிரப்புவதில் காணப்படக்கூடிய தவறுகளை முற்கூட்டியே ஆணையாளர் வெளிப்படுத்தியிருந்தார். கடந்த மாத முற்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தையடுத்து இதனை அவர் சுட்டிக்காட்டி அறிவித்திருந்தார். இதனை ஆங்கில அறிக்கையாக பின்வருமாறு ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன:
”Mr. Ratnayake urged all parties to prioritise youth and women’s participation in the local government
election. He specifically emphasised that the absense of 25% youth representation in the nomination list
could result in it’s cancellation” (உள்ளூராட்சித் தேர்தலில் இளையோர் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். 25 வீதம் இளையோருக்கு இடமளிக்கத் தவறும் வேட்புமனுப் பட்டியல் ரத்துச் செய்யப்படும் முடிவுக்குச் செல்லும்).
பல சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட்டமைக்கு இதுவே முக்கியமானதாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்பட நேர்ந்துள்ளது. இளையோருக்கு 25 வீதம் ஒதுக்கப்பட்ட வேளையிலும் அவர்களின் வயதை நிரூபிக்கும் பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் இணைக்கத் தவறியது, சிலவற்றில் அவற்றைச் சான்றுபடுத்துவோரின் ஒப்பம், காலம் போன்றவைகள் இல்லாமை இவைகள் இரத்துச் செய்யப்பட்டதற்கு காரணமாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட கட்சிகளிலும் சுயேட்சைக் குழுக்களிலும் இடம்பெற்றவர்கள் தங்களுக்கான தேர்தல் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தாங்கள் செல்லவிருப்பதாக சிலர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். நீதிமன்றம் தற்செயலான தவறுகளுக்கு வாய்ப்பளிக்குமா அல்லது தேர்தல் சட்டத்தை ஒட்டியதாக தீர்ப்பை வழங்குமா என்பது எவராலும் முற்கூட்டித் தெரிவிக்க முடியாது.
தேர்தல் சட்டத்தில் புதிய விதிகள் இணைக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இதுவென்பதால் வேட்புமனுக்கள் நிரப்பப்பட்ட பொழுது ஏற்பட்ட தவறுகளை கவனக்குறைவால் ஏற்பட்டவை என்று நியாயப்படுத்தி ஏதாவது வாய்ப்பைப் பெறுவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரே குரலில் கேட்பின், தேர்தல் ஆணையகமும் அதனை நெறிப்படுத்தும் சட்டமுறைகளும் ஏதாவது செய்யலாமெனும் எதிர்பார்ப்பு பலரிடம் காணப்படுகிறது. ஆனால், இவர்கள் எப்போதாவது ஒன்று சேர்ந்து ஒரே குரலில் நிற்பார்களா என்பதுதான் இங்குள்ள முக்கியமான கேள்வி.
வெற்றி பெறக்கூடிய பல கட்சிகளும் சுயேட்சைகளும் கவனக்குறைவான தவறினால் அதற்கான வாய்ப்பை இழந்துள்ளன. இதுவே, குறிப்பிட்ட உள்ளூராட்சிச் சபைகளில் போட்டியிடும் மற்றைய கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் நல்வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தளவில் தமிழரசுக் கட்சியும், அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தியும் பதினேழு உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடும் தகுதியைப் பெற்றுள்ளன. இதனால் இந்தச் சபைகளில் இரண்டு தரப்புகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அநுரவின் ஆட்சித்தரப்பு தமது முழுப்பலத்தையும் ஆயுதமாக்கி இத்தேர்தல் களத்தைச் சந்திக்க தயாராகியுள்ளது. தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்க சகலரும் தங்களுக்கே வாக்களிக்க வேண்டுமென தமிழரசுக் கட்சி உரிமையோடு கோரியுள்ளது. இரு தரப்புமே பதினேழு உள்ளூராட்சிச் சபைகளின் நிர்வாகத்தை தமதாக்கிக் கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளன. இதுபோன்ற நெருக்கடியான சூழல் தமிழர் தாயகத்தில் மற்றைய சில உள்;ராட்சிச் சபைகளிலும் உருவாகியுள்ளது. தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கின் சகல உள்ளூராட்சிச் சபைகளிலும் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு சுமார் நாற்பது நாட்கள் இருப்பதால் தேர்தல் பரப்புரை சூடு பிடித்ததாகவே காணப்படும்.
இதுவரை வெளியான செய்திகளின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் பரப்புரையை அதன் பதில் செயலாளரான சுமந்திரன் தமது பொறுப்பில் எடுத்துள்ளது தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் உள்வீட்டுப் பிளவு இப்போதே நன்கு தெரியவந்துள்ளது. தமது கட்சிக்குள்ளேயே யாரை தோற்கடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் யாரை வெல்ல வைக்க வேண்டுமென்பதைவிட மேலோங்கி நிற்கிறது. சிறீதரன் தரப்பு, சிறீநேசன் தரப்பு, குகதாசன் தரப்பு என்பவை வேண்டப்படாதவைகளாக சிலரால் காணப்படினும், இனநலன் கருதி இவை அனைத்தும் ஒரு தலைமையின் கீழ் போட்டியை சந்திக்க வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பும் கட்சியின் தலைவராக இயங்கும் திரு.சீ.வி.கே.சிவஞானத்தைச் சார்ந்தது. இதனை அவர் காலத்தின் கடமையாகக் கருதி மேற்கொள்ள வேண்டியவராக உள்ளார்.
முன்னைய காலங்களில் உள்ளூராட்சித் தேர்தல் இப்போது போன்று அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைகளினதும் களமாக இருந்ததில்லை. தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் அந்தந்த சபைகளின் எல்லைகளுக்குள் வசிப்பவர்கள் போட்டியிடுவார்கள். அநேகமாக இவர்களில் பலரும் தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். கிராம சபைகள், பட்டின சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் என்பவைகளுக்காக இத்தேர்தல் இடம்பெறும். ஆனால், இப்போது இவை மாற்றம் பெற்றுள்ளன. மாநகர சபைகளுக்கு அடுத்ததாக பிரதேச சபைகள் முக்கிய இடம் பெறுகின்றன.
இச்சபைகளின் எல்லைகளுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களின் வெற்றிக்காக பரப்புரை செய்வது வழக்கம். ஆனால், கட்சித் தலைவர்கள் (ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர்) உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் இன்று உள்;ராட்சிச் சபைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கட்சியின் தலைமைப் பீடமே வேட்பாளர் தெரிவு, பரப்புரை என்பவைகளை தீர்மானிப்பவையாக மாறியுள்ளன. இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு சட்டப்படி அதிகரிக்கப்பட்டதால் வேட்பாளர்களைத் தேடி அலையும் நிலைமை இம்முறை பல கட்சிகளுக்கும் ஏற்பட்டது.
 எட்டு மாத இடைவெளியில் இலங்கையில் இடம்பெறும் மூன்றாவது தேர்தல் இது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அநுர குமர திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவானார். அடுத்த இரண்டு மாத இடைவெளியில் – நவம்பர் 14ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதிலும் அநுர குமர அணியினரே மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றினர். மே மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிச் சபை தேர்தலிலும் தாங்களே அதிகூடிய சபைகளை கைப்பற்ற வேண்டுமென்ற இலக்குடன் இவர்கள் தேர்தலை சந்திக்கின்றனர். ஆதலால் அநுர குமர வடபகுதிக்கு தேர்தல் பரப்புரைக்கென விஜயம் செய்யும் சாத்தியம் கூடுதலாகவுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் ஆகிய இரண்டையும் தங்கள் வசமாக்கும் திட்டத்துடன் அநுர குமர அணி களமிறங்கியுள்ளது. அதற்கும் அப்பால், வடக்கு கிழக்கின் அனைத்து உள்ளூராட்சிச் சபைகளிலும் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்புடன் தமிழரசுக் கட்சி பரப்புரையை ஆரம்பித்துள்ளது. இவ்வருட கடைசியில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் மாகாண சபை தேர்தலுக்கான முன்னோட்டமாக மேற்சொன்ன இரு தரப்பினரும் மே மாதம் 6ம் திகதிய தேர்தலை கணித்துள்ளனர்.
இத்தேர்தல் முடிவுகளை உள்ளடக்கியதாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் அநுர குமர தரப்பு தங்களுக்கான வெற்றிக்களமாகப் பார்க்கிறது. இதனை முற்கூட்டியே அவர்கள் ஒரு சவாலாக தெரிவித்தும் வருகின்றனர். அதற்கு முன்னர் மகிந்த குடும்பத்தினரின் கொள்ளை, நிதி மோசடி மற்றும் ரணிலின் வதைமுகாம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை போன்றவைகளை கையில் எடுத்து அவர்களது கட்சிகளை முடக்கும் நடவடிக்கையில் ஆட்சி பீடம் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரமுகர்கள் சிலர் சஜித் அணியில் இருந்தாலும், அவர்கள் முற்காலங்களில் ரணிலுடன் சேர்ந்து இயங்கியதால் அவர்களில் சிலரும் கூட விசாரணை வலைக்குள் சிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்க தரப்பு எதிர்பார்க்கும் அத்தனை நல்வாய்ப்புகளையும் நம்பிக்கையுடன் வெற்றி பெற முன்னோட்டமாக உள்ளூராட்சிச் சபைத்தேர்தல்களை அவர்கள் நம்புகின்றனர். அதற்கு சமாந்தரமாக தமிழர் தரப்பின் வெற்றியினூடாக தமிழர் தாயகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழ் வாக்காளர்களைச் சார்ந்தது. வேட்பாளர் மனுத்தாக்கலில் சறுக்கியதுபோல் தேர்தலிலும் சறுக்கல் இடம்பெறக்கூடாது.
 பனங்காட்டான்