தமிழக முழுவதும் மார்ச் 27-ல் தர்ணா: சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

9 0

1,640 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை நிரப்பக் கோரி, மார்ச் 27ம் தேதி தமிழகம் முழுவதும் தர்ணா நடைபெறும் என்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ப.குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலைய அளவில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்கள் கிட்டத்தட்ட 100 சதவீத இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுமார் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை கடந்த 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கிடையே பல்வேறு வழக்குகள் காரணமாக அறிவிப்பாணை நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை புதிய அறிவிப்பாணை வெளியிடப் படவில்லை. 100 சதவீத பணியிடங்களும் அதாவது சுமார் 1,640 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால், மே இறுதியில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழையால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற காய்ச்சல் நோய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பெரிய சவாலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களுக்கு ஒப்புதல் கேட்டுள்ள இயக்குநரகத்தின் கருத்துரு கோப்புக்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நடத்தியது.

தற்போது கோரிக்கையின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கருதி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இரண்டு கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, வரும் 27ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலைநேர தர்ணா நடத்துவது, கோரிக்கை களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு அளிப்பது மற்றும் 2ம் கட்டமாக ஏப்.9ம் தேதி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.