நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டிய கலந்தாய்வு கூட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் நின்றபடி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நதிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினையில் போதிய கவனம் செலுத்தாமல், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை பிரச்சினையை கூறி மக்களை திசை திருப்புவதாக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவித்திருந்தது. அந்த வகையில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து திமுக அரசுக்கு எதிராக தங்களது வீடு முன்பு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பகுதியாக சென்னை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு, செண்பகவல்லி, மேகேதாட்டு அணைகள் பிரச்சினை காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லை. அதேநேரம் கேரளா, தமிழகம் அனுமதியின்றி மேகேதாட்டு அணை கட்ட முடியாது என மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. ஆனால் கர்நாடக துணை முதல்வரோ தமிழகத்தின் அனுமதியில்லாவிட்டாலும் அணை கட்டுவோம் என்றார். இதற்கு எதிராக தமிழக முதல்வர் இதுவரை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. கேரள எல்லையில் மருத்துவ, மனிதக் கழிவுகளை கொட்டுகின்றனர். செண்பகவல்லி அணை உள்ளிட்ட தமிழக பிரச்சினையை ஒரு முறை கூட முதல்வர் பேசவில்லை.
இவ்வாறு அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தீர்வு கிடைக்காதவாறு, மாநில உரிமையை முழுவதுமாக முதல்வர் கோட்டை விட்டிருக்கிறார். அரசியல் லாபத்துக்காக மட்டுமே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியவற்றுடன் முதல்வர் தொடர்பில் இருக்கிறார். இருக்கும் பிரச்சினையை மறைத்து பிரச்சினையே இல்லாத தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை ஏமாற்று, பித்தலாட்ட வேலைக்காக அரங்கேற்றுகின்றனர்.
காங்கிரஸ் போல மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு இல்லை என பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகம் ஒரு தொகுதியை கூட இழக்கப் போவதில்லை.
தமிழகத்தில் படுகொலை நடக்காத நாளும், பாலியல் வன்கொடுமை நடக்காத நகரமோ, ஊழல் இல்லாத அரசுத்துறையே இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதை தமிழக அரசு மறுப்பது நியாயமா.
வடஇந்தியர்களை திமுகவினர் அவதூறாக பேசியுள்ளனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தை புறக்கணித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தமிழக அரசியலை மாற்றும் ஊழலாக இருக்கும். இப்பிரச்சினையை பாஜக கையில் எடுத்ததாலேயே டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலைக்கு மதுபானம் கிடைக்கிறது. 2ஜி வழக்கில் தற்போது வரை விசாரணை தொடர்கிறது. வரும் காலத்தில் திமுகவின் ஊழலின் பரிணாமத்தை பார்க்கப் போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல் பாஜக தலைவர்கள் சாலிகிராமத்தில் தமிழிசை, வேளச்சேரியில் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.