உள்ளூராட்சித் தேர்தல் பிரசார செலவீனம் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சு

8 0

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பிரசார செலவினங்களை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுவின் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் சனிக்கிழமை (22) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் குறித்து ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,

சமகால நிலைமைகளுக்கு அமைவாக வேட்பாளர்களுக்கான பிரசார செலவு வரம்புகளை நிர்ணயிப்பது தொடர்பில் தேர்தலிலல் போட்டியிடும் தரப்பினரின் அபிப்பிராயம் கேட்டறிப்பட்டது.

எனினும், இந்தக் கலந்துரையாடலில் செலவீனத்துக்கான இறுதித்தொகை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆகவே மீண்டும் ஒருதடவை கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதன்பின்னர் இறுதியான தொகை தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்றார்.

அத்துடன், எதிர்வரும் மே ஆறாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர்கள் 107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 49சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவ்வேட்புமனுக்கள் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ள என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.