கொக்கிளாய் மீனவர்களின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

269 0

நீரியல் வளத் திணைக்களத்தின் அரச அதிகாரிகளுடன் சென்று தமது மீன்பிடி உரிமை தொடர்பிலான பிரச்சினையை விடயத்தில் சிங்கள மீனவர்களுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதில் தமக்கு நம்பிக்கையில்லை என முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதேச தமிழ் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொக்கிளாய் கடற்பரப்பில் தமிழ் சிங்கள மீனவர்களுக்கு இடையிலான கரைவலைப்பாட்டு உரிமம் தொடர்பான வழக்கு நேற்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரச்சினையை சுமூகமாக தீர்க்குமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது கொக்கிளாய் பிரதேச தமிழ் மீனவர்கள், சிங்கள மீனவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வர முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டனர்.

கொக்கிளாய் கடற்பிராந்திய கரைவலைப்பாட்டு உரிமம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாம் விசாரணைகளுக்கு இதுவரை தயாராகவில்லை என நீரியல்வளத் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக கொக்கிளாய் மீனவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிபதியிடம் இரு தரப்பு மீனவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பும் இணங்கும் பட்சத்தில் நீரியல் வளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும் என நீதிபதி குறிப்பிட்டார்.

அவ்வாறு இணங்கும் பட்சத்தில் நாளைதினம் நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து மீன்பிடிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி அறிவித்தார்.

அத்துடன் நீதிமன்ற தடையுத்தரவை மீறி சிங்கள மீனவர்கள் மீன்பிடிப்பது குறித்து கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் சார்பில் நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராயுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்