உள்ளூராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்குமிடையில் சனிக்கிழமை (22) கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தைகிழக்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும், அந்தந்த பிரதேச இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வதென்பது தொடர்பில் பேசப்பட்டதுடன், வேட்பாளர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றுவதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.