இலங்கை அரசியலில் விரைவில் புதியதோர் மாற்றம் ஏற்படும் – கருணா

240 0

நாட்டில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் தீர்வினை வழங்குவதற்கு சரியான திட்டங்கள் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக்கூட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இதை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்துள்ளது, மக்கள் தற்போது மாற்றத்தினை எதிர்பார்க்கின்றனர், இதை உணரவும் ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த மாற்றத்தை மக்கள் மட்டுமல்ல. மக்கள் பிரதிநிதிகளும் உணரத்தொடங்கி விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். திரை மறைவில் தொடர்ந்து கலந்துரையாடல்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் இலங்கை அரசியலில் விரைவில் புதியதொரு மாற்றம் ஏற்படும் என்பது உறுதியாக தெரிவதாகவும் கருணா எனப்படும் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்