இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும்!

26 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை. பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு நேரமும், காலமும் வழங்கப்படுகின்றது. இலங்கை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் தங்கள் புவிசார் அரசியலுக்கு ஏற்றவாறு தீவில் ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது வரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு அதிகாரப்பூர்வமான கட்டமைப்பை அங்கு நிறுவுவதற்கு முடியவில்லை. இதுவொரு மிகப்பெரிய குறைபாடாகும், ஏனெனில் மின்னஞ்சல் மற்றும் பிரதிநிதிளினால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் மட்டுமே ஆதாரங்களை சேகரிக்க முடியுமான நிலைமையே தற்போது உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு சரியான பொறிமுறையை நிறுவுவதற்குத் தவறிவிட்டது.

எனவே, ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் அதைக் கொண்டுவருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இலங்கை அரசாங்கமானது ஐ.நா.வின் தீர்மானங்களுடன் ஒத்துழைக்கத் தவறியிருப்பதோடு, அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியும் உள்ளது. ஆகவே இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பேரவையானது உயர் வழிமுறைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.