மாத்தறை – தெவிநுவர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தெவிநுவர பகுதிக்கு நேற்றைய தினம் இரவு 11.45 மணியளவில் வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தெவிநுவர பகுதியைச் சேர்ந்த கசுன் தாரக்க என்ற 29 வயதுடைய இளைஞனும் யொமேஷ் நதீஷான் என்ற 28 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் தெவிநுவர , கபுகம்புர பிரதேசத்தில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கித்தாரிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேன் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் வைத்து ரி- 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துபாயில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பாலே மல்லி” என்று அழைக்கப்படும் ஷெஹான் சத்சர ஹேவத் என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
“பாலே மல்லி” என்பவருக்கும் உயிரிழந்த இளைஞர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.