நீதிமன்றத்துக்கு கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார். தேசபந்துக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் அர்ஜுன அசோசியஸிடமிருந்து நான் நிதி பெற்றிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஹர்ஷன சூரிய பெருமன குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்களை போன்று இவரும் பொய்யுரைப்பதையிட்டு கவலையடைகிறேன்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் நான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சாட்சியமளித்துள்ளேன்.அதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை கொண்டு முடிந்தால் வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.
கடந்த தேர்தல்களில் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள். பாராளுமன்றம் தற்போது பொய்யால் சூழப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடி தொடர்பில் கோப் குழுவில் சாட்சியமளித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் முறையற்ற வகையில் தலையீடு செய்துள்ளதை நான் தான் வெளிப்படுத்தினேன்.
ஆகவே உங்களின் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சிகளில் செயற்பட்டதை போன்று பொய்யுரைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாக தேர்தல் காலத்தில் குறிப்பிட்டீர்கள். இந்த வாக்குறுதியை குறிப்பிட்டுக் கொண்டு பட்டதாரிகள் பாராளுமன்றத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். 10,000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் அரச சேவைகள் ஆணைக்குழுவில் வினவிய போது ஒரு நியமனங்கள் கூட வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பிரதமர் பொய்யுரைப்பதும் கவலைக்குரியது.
மாவட்ட அபிவிருத்திகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆளும் தரப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கப்படுகிறது.
வடக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கு இந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த நிதியை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் வழங்குங்கள்.
மதுபானசாலைக்கான அனுமதிபத்திரங்கள் பெற்றுக்கொண்டவர்களின் விபரங்களை வெளியிடுவதாக அரசாங்கம் குறிப்பிட்டது.ஆனால் இதுவரையில் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்டோருக்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே உண்மையான விபரங்களை பகிரங்கப்படுத்துங்கள்.
விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழக்கு விசாரணையில் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைக்களத்தின் திலிப பீரிஸ் நீதிமன்றத்துக்கு கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து தென்னகோனின் பெயர் பல ஆண்டுகாலமாக தேருடர் இடாப்பில் கூட பதிவு செய்யப்படவில்லை. என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டு தேசபந்து தொடர்பில் பல விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியிருப்பதற்கு யார் அடைக்கலம் கொடுத்தது. தேசபந்து இருக்கும் இடம் தமக்கு தெரியும், அவர் நீதிமன்றத்தில் சரணடையாவிடின் அவரது சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறாயின் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியிருந்த இடத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு பிரயோகத்தை மேற்கொள்வதற்கு ஒத்தாசை வழங்கியதாக தேடப்படும் சந்தேகநபர் செவ்வந்திக்கு என்னாயிற்று என்று தெரியவில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பு செயற்பாடுகள் மலினமடைந்துள்ளன என்றார்.