அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

9 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய  சனிக்கிழமை (22) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80 000க்கும் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக செலவுகளும் அதிகமாகவே காணப்படும்.

அதேவேளை வேட்பாளர்கள் செலவிடக் கூடிய  செலவுகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் சுயாதீன குழுக்களின் தலைவர்களுடன் கலந்துரையாடுவர்.

அதேவேளை பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் சனிக்கிழமை (22) தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்துரையாடல்களின் பின்னர் தேர்தலுக்கான செலவுகள் மதிப்பிடப்படும். அதேவேளை வேட்பாளர்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பிலும் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.

அதற்கமைய வேட்பாளர் ஒருவர் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்படும். எமது அறிவித்தருலுக்கமையவே வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் செலவுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் நிறைவடைந்து 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 13 வேட்பாளர்கள் இதனை சமர்ப்பிக்கவில்லை. அதேபோன்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களிலும் கணிசமானோர் அதனை சமர்ப்பிக்கவில்லை. இவர்களுக்கெதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வருமானம் மற்றும் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் நிச்சயம் அவர்களுக்கெதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு கிடைக்கப் பெறும் சகல வருமான, செலவு அறிக்கைகளும் இணையதளம் உள்ளிட்டவற்றில் காட்சிப்படுத்தப்படும்.

இவற்றை பொது மக்களுக்கும் பார்வையிட முடியும். அவற்றில் ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால் பொது மக்களுக்கும் வழக்கு தொடர முடியும். வழக்கின் தீர்ப்பிற்கமைய சில சந்தர்ப்பங்களில் குடியுரிமையைக் கூட இழக்க வேண்டியேற்படும். அல்லது வகிக்கும் பதவிகளை இழக்க நேரிடும். அது மாத்திரமின்றி வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.