ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார் நிறுவனத்தின் சமபோசா ?

12 0

ச.தொ.ச. ஊடாக வழங்கப்படும் உணவு நிவாரண பொதியில் சுகாதார அமைச்சின் கீழ் உற்பத்தி செய்யப்படும் சமபோசா  பெக்கட்டுக்களை உள்ளடக்காமல் ஏன் தனியார் நிறுவனம் உற்பத்தி செய்யப்படும் சமபோசா  பெக்கட்டுக்களை  உள்ளடக்க வேண்டும். இது 30 கோடி ரூபா வியாபாரமாகும் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  டி.வி.சானக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21)  நடைபெற்ற அமர்வின் போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது,

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு   புதிதாக விண்ணப்பித்துள்ள 8 இலட்சத்து 7 ஆயிரம் பேருக்கு  சித்திரை புத்தாண்டு  காலத்தை முன்னிட்டு 5000 ரூபா பெறுமதியான  உணவு பொதியை  2500 ரூபாவுக்கு வழங்குவதாக  வர்த்தகத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இதனை வரவேற்கிறோம்.

இந்த நிவாரண பொதியில் 5 கிலோகிராம் நாடு அரிசி, பெரிய வெங்காயம்  2 கிலோ கிராம், உருளைக்கிழங்கு 2 கிலோகிராம், பருப்பு ஒரு கிலோகிராம், டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 3 கிலோ கிராம், கோதுமை மா 2 கிலோகிராம், சமபோசா 2 பெக்கட், 4 சோயா மீட் பெக்கட் உள்ளடக்கப்படும்  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏன் இரண்டு சமபோசா பெக்கட்டுக்களை வழங்க வேண்டும். சுகாதார அமைச்சின் கீழ் திரிபோஷா உற்பத்தி செய்யப்பட்டு,  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  இலவசமாக விநியோகிக்கப்படுகிறது.

அதேபோல் சுகாதார அமைச்சின்  கீழ் தான் சுபோச உற்பத்தி செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள  நிவாரண பொதியில் 2 சமபோசா பெக்கட்டுக்கள் உள்ளடக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஏன் சுகாதார அமைச்சின் கீழ் உற்பத்தி செய்யப்படும் சுபோசாவை வழங்கவில்லை. இது 30 கோடி ரூபா வர்த்தகமாகும். வர்த்தகத்துறை அமைச்சு தனியார் நிறுவனத்திடமிருந்து சமபோசாவை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தான்   சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவராக பதவி வகிக்கிறார்.

சம்பளம் பெறுவதில்லை  என்றும் குறிப்பிடப்படுகிறது. அரச நிறுவனத்திடமிருந்து சுபோசாவை கொள்வனவு செய்யாமல், ஏன் தனியார் நிறுவனத்திடமிருந்து   சமபோசாவை கொள்வனவு செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.  வரிகளை குறைப்பதாக குறப்பிட்டார்கள். உணவு, சுகாதாரம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள  வற் வரியை நீக்குவதாக குறிப்பிட்டார்கள்.

ஆனால், அந்த வரிகள் ஏதும் குறைக்கப்படவில்லை. மாறாக உண்ணாட்ரசிறை  (திருத்தச் ) சட்டத்தின் ஊடாக வரிகளும்,  நிகழ்நிலை சேவைக்கான  வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே  வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்றார்.