சிரேஷ்ட பிரஜைகளின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களின் நிதி தேவைமீது கவனம் செலுத்தி 10 இலட்சத்துக்கும் குறைவான அவர்களது வங்கி வைப்புக்காக மேலதிகமாக நூற்றுக்கு 3 சதவீதத்தை வட்டியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நிலையியற் கட்டளை 27 இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிரேஷ்ட பிரஜைகளின் நலனைக் கருத்திற் கொண்டு அவர்களின் நிதி தேவை மீது கவனம் செலுத்தி 10 இலட்சத்துக்கும் குறைவான அவர்களது வங்கி வைப்புக்காக மேலதிகமாக நூற்றுக்கு 3 சதவீதத்தை வட்டியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி மேலதிகமான 3 சதவீத வட்டிக்கான நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு இணங்க எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான மேலதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள வரி என தனியாக வேறு வரி எதுவும் கிடையாது. ஒருவர் தனது வருமானத்திற்கு இணங்க செலுத்தும் வரி வீதத்தையே தேசிய வருமான வரி திணைக்களம் அறவிடுகின்றது. அந்த முறைமையொன்று மாத்திரமே நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் பூச்சியத்திலிருந்து நூற்றுக்கு 36 சதவீதம் வரை வரி வீதத்திற்கு அமைவாக முழு வட்டி வீதத்திற்கும் தடுத்து வைப்பு வரி அறவிடப்படுகிறது. வட்டியின் அடிப்படையில் தடுத்து வைப்பு வரியாக தற்போது 5 வீதம் அறவிடப்படுகிறது.
வரி அடிப்படையை விரிவாக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்புக்கான இரண்டாவது மீளாய்வு பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டவாறு 2025 ஆம் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப இணக்கப்பாடு கண்டுள்ள முறைமையிலேயே அந்த வட்டி வீதம் நூற்றுக்கு 10 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.