தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தேசியமக்கள் சக்திஅரசாங்கத்தின் இந்த கன்னி வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசின் வருமானமாக 4990 பில்லியன் ரூபாவும் செலவீனமாக 7190 பில்லியன் ரூபாவும் தூண்டுவிழும் தொகையாக 2200 பில்லியன் ரூபாவும் காட்டப்பட்டிருந்தது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையிலான 7 நாட்கள் இடம் பெற்று 25 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அரசு தரப்பினருடன் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்த நிலையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கியதேசியக்கட்சி, நாமல் ராஜபக்ச பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன, ரவி கருணாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய ஜனநாயக முன்னணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.
அதேவேளை சிறீதரன் எம்.பி தலைமையிலான தமிழரசுக்கட்சியும் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பியுமான இ.அர்ச்சுனா உட்பட 23 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
அதனைத்தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்திற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டு பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் இன்று 21 ஆம் திகதிவரையில் விவாதம் இடம்பெறும் நிலையிலேயே மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.