இலங்கையில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டம் தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனம் தமது நிலைப்பாட்டை அனுப்பி வைத்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை பரிசீலனை செய்து, அரசாங்கத்தின் தீர்மானத்தை வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்போம். குறித்த கருத்திட்டம் தொடர்பில் 2023.08.23 ஆம் திகதியன்று வழங்கப்பட்ட அமைச்சரவை அனுமதியில் காணப்படும் சிக்கல்கள் பரிசீலனை செய்யப்படுகிறது என சக்தி வலுத்துறை அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையில் காற்றாலை மின் சக்தியையும், சூரிய மின் சக்தியையும் அதிகரிப்பதற்காக இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் அல்லது அதன் துணை நிறுவனத்துடன் இலங்கை அராசங்கம் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சக்தி வலுத்துறையின் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடாக உற்பத்தி செய்வதற்காக மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் 484 மெகாவாட் காற்றாலை மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்தின் முதலீட்டுடன் உற்பத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் 6 பங்குதாரர்களுக்கும் உரிய பொறுப்புக்கள் மற்றும் கருமங்களை தனித்தனியாக எடுத்துரைப்பது ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும். 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சார திருத்தச் சட்டத்தின் பிரகாரம் போட்டிநிலை விலைமனுக்கோரலின்றி குறித்த நிறுவனத்துடன் இலங்கையின் மின்சாரத்தை உற்பபத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சட்டத்துக்கு இணங்க ‘ஓர் அரசாங்கத்துக்கும் பிறிதொருக்கு அரசாங்கத்துக்கும் இடையில் என்ற வரையறைக்குள் இந்த கம்பனி உள்ளடங்காது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 2023.08.23 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரத்துடன் அதானி நிறுவனத்துக்கு காற்றாலை மின்னுற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக 2024.12.30 ஆம் திகதியன்று கூடிய அமைச்சரவை 2023.08.23 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியை இரத்துச் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்து அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தில் இருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளது. அதானி நிறுவனத்துடனான கருத்திட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.மாறாக 2023 ..08.23 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானமே இரத்துச் செய்யபட்டு மீளாய்வு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டம் தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனம் தமது நிலைப்பாட்டை அனுப்பி வைத்துள்ளது. அதன் உள்ளடக்கத்தை பரிசீலனை செய்து, அரசாங்கத்தின் தீர்மானத்தை வெகுவிரைவில் சபைக்கு அறிவிப்போம் என்றார்.
இதன்போது எழுந்து மேலதிக கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா , இந்தியா வேறு, அதானி வேறு, அதானி இந்திய அரசாங்கமல்ல, தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசார மேடைகளில் அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டது.
இது அரசாங்கத்துக்கும் பிறிதொரு அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தமல்ல, என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்துக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தமாகும்.
போட்டித்தன்மையான விலைமனுக்கோரல் இல்லாமல் இரண்டு மடங்கான விலைக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆகவே ஏன் போட்டித்தன்மையான விலைக்கு விலைமனுக்கோரல் செய்யப்படவில்லை என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் குமார ஜயகொடி , அதானி கருத்திட்டத்துக்காக 2023.08.23 ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியில் பல சிக்கல்கள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அது தற்போது மீள்பரிசீலனை செய்யப்படுகிறது என்றார்.