கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க ஏறாவூர் நகரசபையின் வேட்பாளராக போட்டியிடுவதாகவும், அதற்காக பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான மொஹமட் சாலி நலீம் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;
என்னை நம்பி எனது கட்சி தலைமையால் எனக்கு ஒப்படைக்கப்பட்ட தேசிய பொறுப்பை, எனக்கு அங்கீகாரம் வழங்கிய எனது மண்ணின் மக்களுக்கும் கட்சிக்கும் சமர்ப்பணம் செய்த ஒரு வரலாற்று பெருமையை இந்த உயரிய சபையில் நிறைவேற்றிய பெருமையுடன் பதவியை தக்க வைக்கவும் நிலைநிறுத்தவும் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காற்றிலே பறக்கவிட்டு அற்ப சலுகைகளை எதிர்பார்த்து கட்சிக்கும் பிறந்த மண்ணுக்கும் வாக்களித்த மக்களுக்கும் தலைகுனிவை உண்டாக்கிவிட்டோர் வரிசையில் சேராது எடுத்த அமானிதத்தை சரிவர நிறைவேற்றி மக்கள் பிரதிநிதியாக தலை நிமிர்ந்து இந்த உயரிய சபையிலிருந்து விடைபெற்றுக்கொள்கின்றேன்.
அரசியல் பதவிகளில் கிடைக்கும் ஊதியம், சலுகைகள் என்பன என்னை அங்கீகரித்த மக்களுக்கு உரித்தான ஒன்றாகும். அதனை துளியும் எனக்காக பாவிக்காது மக்களுக்கு வழங்கும் நடைமுறையை 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை பிரதிநிதியாக ஏறாவூர் நகரசபையில் முன்னெடுத்து இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நடைமுறைப்படுத்தியிருக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 3 மாத காலத்திற்குள் ஏழரை இலட்சம் ரூபா சம்பளத்தையும் எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் பகிர்ந்தளித்துள்ளேன்.
எமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம்,கட்சியினுடைய செயலாளர், கட்சியினுடைய அதியுயர்பீட உறுப்பினர்கள் ஏனையவர்களுக்கும் நான் நன்றிகளை தெரிவிக்கின்றேன். இந்த தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் கேட்காமலேயே என் மீது நம்பிக்கை வைத்து தந்த கட்சித்தலைமைக்கு நான் எந்தக்காலத்திலும் துரோகம் செய்யாது அவ்வாறு துரோகம் செய்தவர்களின் பழியையும் துடைத்து எறிபவனாக கட்சியால் எனக்கு வழங்கப்பட்ட இந்த பிரதிநிதித்துவத்தை கட்சி கேட்கின்ற நேரத்தில், கட்சியின் தீர்மானத்திற்கு தலைவணங்குபவன் என்ற அடிப்படையில் எனது இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை நான் கட்சிக்காக ஒப்படைகின்றேன் .இராஜிநாமா செய்கின்றேன்.
என்னுடைய கட்சி வேண்டிக்கொண்டதற்கிணங்க ஏறாவூர் நகரசபையினுடைய வேட்பாளராக நான் போட்டியிடவுள்ளேன்.ஏறாவூர் மக்கள் ஒருபோதும் எமது கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். இந்தக்கட்சிக்கு அவர்கள் என்றுமே கடமைப்பட்டவர்கள் .அவர்கள் எமது கட்சிக்கு வெற்றியைப் பெற்றுத்தருவார்கள் என்று கூறி இன்றிலிருந்து நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்து கொள்கின்றேன் என்றார்.