நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி ஒழுங்கை மேற்கொள்ளவுள்தாக சபாநாயகர் கரு ஜெயசூரிய உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விடயத்தை இன்று மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் முன்வைத்தனர்.
முதலில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கே விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருக்கும் போது, மகிந்த ராஜபக்ஷவிற்கு பல மடங்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் மே தினத்தின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து கருத்து வெளியிட்ட ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மேதின நிகழ்வை அடுத்து ஒருவரின் பாதுகாப்பு குறைக்கப்படுமாக இருந்தால், அதில் கண்டிப்பாக அரசியல் நோக்கம் இருக்கிறது.
எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பில் கிரமமான முறையோ, அதற்கு பொறுப்பான நபரோ இல்லாமல், இந்த விடயங்களை கையாளுவது பொறுத்தமானது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர் கருஜெயசூரிய, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி ஒழுங்கினை மேற்கொள்வதாக கூறினார்.
இதேவேளை, அந்நிய செலாவணி சட்ட மூலத்தில் அரசியல் யாப்புடன் ஒத்திசையாக சரத்துக்களை நீக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை இன்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துளகுணவர்தன சபாநாயகர் முன்வைத்தார்.
இந்த சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் நேற்று சபையில் அறிவிக்கும் போது, குறித்த சட்ட மூலத்தில் திருத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றிக் கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் சபாநாயகர் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக, அந்நிய செலாவணி சட்ட மூலம் அரசியல் யாப்புடன் இசைந்து செல்வதாகவே தெரிவித்ததாகவும், இதன் ஊடாக குறித்த சரத்துக்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், நாடாளுமன்ற சபைமுதல்வர் லக்ஸ்மன் கிரியல்ல விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், அந்நிய செலாவணி சட்ட மூலத்தில் உள்ள அரசியல் யாப்புக்கு விரோதமான சரத்துக்களை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இதனை ஏற்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன, புலம்பெயர்ந்த மக்களிடம் உள்ள விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணத்தை, பணச்சலவை செய்வதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என்று கூறினார்.
அத்துடன் நாட்டுக்கு ஏற்புடையதல்லாத பணத்தை நாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, மகிந்த அணியினர் நாட்டுக்கு பணம் வருவதை விரும்பவில்லை என்பது இதில் இருந்து புலனாவதாக தெரிவித்தார்.