31 ஆண்டுகள் கடந்து தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்- தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி.

476 0

35ஆண்டுகளுக்கு முன் தமிழாலயங்களில் விதைக்கப்பட்ட தமிழ்மொழியின் அறுவடை அளவுகோல்களில் ஒன்றான தமிழ்த்திறன் போட்டியானது, தமிழாலய மாணவர்களிடையே 31ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது. தமிழாலய மட்டத்திலும், மாநில மட்டத்திலும் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டியில் தமது தமிழ்த்திறனை வெளிப்படுத்திய மாணவர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டி 08.03.2025 சனிக்கிழமை முன்சன்கிளாட்பாக் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனனப் போட்டிகளும் வாசித்தல், சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், கட்டுரை போன்ற எழுதுதல் போட்டிகளுடன் கவிதை, உரையாற்றல், ஓவியம் மற்றும் சிறப்புப் போட்டிகளும் நடைபெற்றன.

காலை 09:30 மணிக்குத் தமிழீழ விடியலுக்காகத் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் நினைவேந்தி, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமத்திய மாநிலத்தின் சிறப்புப் பொறுப்பாளர் திரு. கணபதிப்பிள்ளை ஜெயக்குமார் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயப்பண் ஆகியவற்றுடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு. இராஜ. மனோகரன் அவர்களின் தொடக்க உரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின்; பொறுப்பாளர் ஷசெம்மையாளன்| திரு. செல்லையா லோகானந்தம் ஆகியோரின் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 10:45 மணிக்குப் போட்டிகள் தொடங்கி 17:00 மணிக்கு நிறைவுற்றன. தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் போட்டிப் பிரிவின் ஒழுங்கமைப்பட்ட நிர்வாகத்தில் பட்டறிவு நிறையப்பெற்ற தமிழாலயங்களின் மூத்த ஆசான்களுடன் இளைய ஆசான்களும் இணைந்து 47க்கு மேற்பட்டவர்கள் கண்ணியத்துடன் போட்டிகளை நடுவம் செய்தனர். மாநிலமட்டத்திலான 42க்கு மேற்பட்ட இளைய செயற்பாட்டாளர்கள் தமிழ்த்திறன் பிரிவின் திட்டமிடல் பொறிமுறைக்கமைய போட்டிகளைச் செவ்வனவே நடாத்தி நிறைவுசெய்தனர். தமிழ்த்திறன் போட்டியின் 41 விடயங்களில் 375க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் 658 போட்டிகளில் பங்கேற்றதுடன், 200க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சிறப்புப் போட்டிகளில் பங்கேற்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

போட்டிகள் ஒவ்வொன்றும் நிறைவுபெற்ற பின்னர் போட்டிகளில் பங்கேற்ற போட்டியாளர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் பதக்கமும் வழங்கித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்த்திறன் போட்டி 2024இல் அனைத்து மட்டங்களிலும் போட்டியிட்டு முதல் மூன்று நிலைகளில் வாகைசூடிய வெற்றியாளர்களுக்கும் நாடுதழுவிய மட்டத்தில் வாகைசூடிய தமிழாலயங்களுக்கும் எமது 35ஆவது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கவுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

யேர்மனியின் பரந்துபட்ட நகரங்களிலிருந்து நீண்டதொலைவு தமது பயணங்களை மேற்கொண்டு, தமிழாலயங்களின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையானது, தமிழ்க் கல்விக் கழகத்துக்கும் தமிழ்த்திறன் போட்டிக்கும் அவர்கள் வழங்கும் அகத்தியமானது தமிழ்த்திறன் போட்டி இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நின்று தமிழ்க் குழந்தைகளுக்கான பயனை அள்ளி வழங்குமென்பதை அனைவருக்கும் உணர்த்தி நிற்கின்றது.