பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள்

274 0

வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் என்ற அமைப்பு காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு எங்கணும் மக்கள் போராட்டம் வலுவுற்றிருக்கும் இத்தருணத்தில் தகவல் ரீதியாகவும் கருத்துரீதியாகவும் தெளிவான கோரிக்கைகளை சர்வதேச மட்டத்தில் முன்வைக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டோருக்கான நீதியை சர்வதேச தரப்புக்களும் இலங்கை அரசிடம் மட்டும் கையளித்துவிட்டு காலத்தை இழுத்தடித்து பொறுப்புக்கூறலை மழுங்கடிக்கும் போக்கை ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைந்த முறையில் மறுதலிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதோடு, இலங்கை அரசுக்கும் அப்பாற்பட்ட நிலையில் பொறுப்புக்கூறவேண்டிய கடமை பல சக்திகளுக்கு இருக்கிறது என்பதை குறித்த சக்திகளுக்கு மட்டுமன்றி, உலகளாவிய மனிதாபிமான சமுதாயத்திற்கு ஆதாரபூர்வமாகவும் கருத்தியில் ரீதியாகவும் உரத்துக் கூறவேண்டிய ஈழத்திமிழர்களின் ஒன்றிணைந்த குரலாக இந்த அமைப்பு இயங்கும்.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரல் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. இன அழிப்புப் போரின் பரிமாணங்கள் அனைத்தும் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதிகோரலுக்கு உள்ளடங்கும். இராணுவ ஆக்கிரமிப்புக்குள் தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் ஆளாக்கப்பட்டிருப்பதும், புலனாய்வுக் கண்காணிப்புக்கு ஊடாக அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களும் நீதிகேட்பவர்களும் அச்சுறுத்தப்படுவதும், இலங்கையின் உள்நாட்டு நீதித்துறை முக்கியமான விசாரணைகளை எல்லாம் கிடப்பில் போட்டுவருவதையும் சர்வதேச மட்டத்தில் ஆதாரபூர்வமாகத் தொடர்ந்தும் வெளிப்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

வடக்குக் கிழக்கு எங்கணும் பல்வேறு காலகட்டங்களில் நடந்தேறிய படுகொலைகள் தொடக்கம், புதைகுழிகளில் புதைக்கப்பட்டோருக்கான அடையாளம் காணுதல் வரை சர்வதேசப் பங்களிப்புக் கோரி நாம் பல நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கவேண்டிய காலமும் இதுவாகும். குறிப்பாக, இன அழிப்புப் போரின் பலவித பரிமாணங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும், போராட்டங்களை முன்னெடுப்பவர் களாகவும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்களின் குரலை அமைப்பு ரீதியாக முன்னிலைப்படுத்தும் தன்மை எம்மிடை மிகவும் குறைவாக உள்ளது.

இந்தக் குறைபாட்டைக் களைந்து பெண்களின் அமைப்புரீதியான செயற்பாட்டுக்கான ஒரு தளத்தை காத்திரமாகக் கட்டியெழுப்புவதும் எமது நோக்கமாகும். இன அழிப்புப் போருக்குப் பின்னர், கட்டமைப்பு இன அழிப்பு எம்மை எவ்வாறெல்லாம் சீரழித்துவருகிறது என்பதையும், குறிப்பாக பண்பாட்டுச் சீ;ர்கேடுகளை நாம் எவ்வாறு எதிர்கொண்டுமுறியடிப்பது என்பது குறித்த ஒரு ஒருங்கிணைந்த வேலைப்பாட்டுக்கான தளமாகவும் இந்த அமைப்பு இயங்கும் என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகிறோம். இந்த அமைப்பை அறிவு பூர்வமாகவும், மக்கள் தளத்திலான செயற்பாட்டுநிலையிலும் வலுவாகக் கட்டியெழுப்பும் பணியில்
அனைவரின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் நாடி நிற்கிறோம்.
இவ்வண்ணம்
அனந்தி சசிதரன்
மக்கள் பிரநிதி