ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள்- கி.துரைராஜசிங்கம்

1163 0

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் 1,000 பேருக்கு முதற்கட்டமாக  கால மூப்பு அடிப்படையில் நியமனங்கள்  வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது என அம்மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், இன்று; தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் இந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன்போது, வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் சாதகமான பதில் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா.சம்பந்தனின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,  வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அவரது ஆலோசகருடன் புதன்கிழமை (3) கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, பட்டதாரிகளுக்கான  வேலைவாய்ப்புத் தொடர்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், 2012ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து நியமனங்கள் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   மேலும், குறித்ததொரு தொகையினருக்குத் தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை வழங்கும் வகையில் அவர்களை ஆரம்பத்தில் பயிற்சியாளர்களாக நியமிப்பதுடன், பின்னர் அவர்களின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கும் நியமனங்கள் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இந்த விடயத்தை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தெரியப்படுத்தியுள்ளார்