வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை -சி.தவராசா

337 0

வடமாகாண சபை வினைத்திறனற்ற சபை. வடமாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததை விட தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் காணவில்லை.

கல்வியில் 9ஆம் இடத்தில், அபிவிருத்தியில் 9ஆம் இடத்தில் என கடைசி நிலையிலேயே வடமாகாணம் இருக்கின்றது என வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “வடமாகாணம், ஆளுநருடைய ஆட்சியில் இருந்தபோது நடந்த அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை விட தற்போது எந்த மாற்றத்தையும் காணவில்லை.  வடமாகாணத்தில், 32 ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் உள்ளனர். அவர்களை கொண்டு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கவேண்டும்.

குறைந்தபட்சம் ஆசிரியர்களை கூட சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடமாகாணசபை உள்ளது. அண்மையில் 450 வரையான பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் உள்வாங்கப்பட்டனர். அவர்களில் 100 வரையான ஆசிரியர்கள் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றாமல் மீண்டும் இருப்பிடங்களுக்கு அருகில் வந்துள்ளனர்.

அதேபோல் கழிவுகளை முகாமை செய்வதற்கும் கூட இயலாத நிலையே காணப்படுகின்றது.   எனவே, செய்யவேண்டிய விடயங்களை கூட, வடமாகாணசபை செய்யாமல் விட்டிருக்கின்றது. அரசியலமைப்பின் ஊடாக 35 விடயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும் அவற்றை கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை” என்றார்.