பாதகமான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது-சிறிசேன

232 0
நாட்டுக்கு பாதகமான நிபந்தனைகளுடனான எந்தவொரு முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சக்திவலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு எவ்வாறான பொருளாதார நலன்களைக் கொண்டுவந்தாலும், ஒருபோதும் பாதகமான, பொருத்தமற்ற முதலீட்டு, வர்த்தக உடன்படிக்கைகள் எந்தவொரு நாட்டுடனும் கைச்சாத்திடப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் மின்னுற்பத்தியின்போது சுற்றாடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி, பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக பொருத்தமான கலப்பு மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.