எங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று கிடைக்கவேண்டும் என்று முற்போக்கான சக்திகள் முயற்சிக்கும்போது அதனை குழப்பியடித்து மீண்டும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல்செய்வதற்காக பாதயாத்திரையை மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரு மாடிக்களைக்கொண்ட வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் சோ.தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.கிழக்கு மாகாணசபையின் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்பது மில்லியன் ரூபா செலவில் இந்த இருமாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டு மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் செயற்படும் நாட்டை குழப்பும் பிரிவினர் கண்டியில் இருந்து ஒரு பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.புதிய அரசியல்யாப்பு உருவாக்கத்திற்கான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுவரும்வேளையில் நாட்டில் இன ஒருமைப்பாடு,சமாதானம் ஏற்படக்கூடாது என்ற வகையில் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள்,பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்களே தங்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தாங்கள் குற்றவாளிகளாக்கப்படுவோம் என்பதற்காகவும் அதன் காரணமாக நாட்டையும் நாட்டு மக்களையும் திசைதிரும்பி ஆளும் அதிகாரத்தினைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் இந்த பாதயாத்திரையை நடாத்துகின்றனர்.இந்த பாதயாத்திரையை நடாத்துபவர்கள்,அதற்காக முன்னிற்பவர்கள் சுத்தமான கொத்தமல்லிகள் அல்ல.நாட்டை குழப்புவதற்காகவே இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.
எங்களது மக்களின் நிதியை நாட்டுக்கான நிதியை மிகமோசமான முறையில் கையாடல்செய்தவர்கள்தான் அரசியல்யாப்பு ரீதியாக ஒரு இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்வு ஒன்று கிடைக்கவேண்டும் என்று முற்போக்கான சக்திகள் முயற்சிக்கும்போது அதனை குழப்பியடித்து மீண்டும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல்செய்வதற்காக இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.
இந்த விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் ஆர்ப்பாட்டம்,பாதயாத்திரைகள் செய்தால் அந்த ஆர்ப்பாட்டம்,பாதயாத்திரையை நடாத்துபவர்களை துப்பாக்கிகள் கொண்டு கொன்றுவிடும் அல்லது அழித்துவிடும் கலாசாரம் இருந்துவந்தது.இன்று அந்த கலாசாரம் மறைந்துள்ள காரணத்தினால் இந்த கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த பாதயாத்திரையை செய்கின்றார்கள்.இந்த பாதயாத்திரை நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது அல்ல.இனவாதிகளுக்கு மாத்திரமே இவை நல்லவிடயமாக இருக்கும்.பொதுமக்களுக்கு இடைஞ்சல்களையும் நெரிசல்களையுமே ஏற்படுத்துகின்றது.